Friday, October 1, 2010

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டதன் பலன் எந்திரன் பிரமாண்டம்...

 

      வியக்கவைக்கும் பிரமாண்டம் , அதிரவைக்கும் இசை, தூள் பறக்கும் நடிப்பு என அசத்த வருகிறது எந்திரன். இப்படி ஒரு பிரமிப்பான படத்தை எடுக்க எப்படி எல்லாம் மெனக்கெட்டிருக்க வேண்டும்.  சும்மா வந்ததா சுதந்திரம்...? என்பதுபோல் சும்மா வந்ததா எந்திரன்... என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட கூறலாம் எந்திரன் படக்குழு. அந்த அளவிற்கு மொத்த உழைப்பை தந்து, தூக்கத்தை இழந்து, உணவையும்கூட மறந்து எந்திரன் கனவை நினைவாக்கி உள்ளனர். 

எரிமலை கக்கும் மலை நடுவில்... ஹாலிவுட் படங்களுக்கே அனுமதி மறுக்கப்படும் ஆபத்தான மலைச்சரிவில்... மூச்சுகூட சுகமாய் விடமுடியாத அளவிற்கு மணலை வாரியடிக்கும் சூறாவளி வீசும் மணற்பரப்பில்... இப்படி மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு. இவ்வாறன பல கஷ்டங்களையும் எந்திரனுக்காக படக்குழுவினர் ஒவ்வொருவரும் இஷ்டப்பட்டு செய்தோம் என்கிறார் இயக்குனர் ஷங்கர். 

இது பற்றி இதோ அவரே...

“முதன் முதல் படப்பிடிப்பே ‘கிளிமாஞ்சாரோ’ பாடலுக்குதான். தொடக்கமே எரிமலை சூழ்ந்த, பெரு நாட்டின் மச்சுபிச்சு மலைத்தொடர் பகுதியில். இந்தப் பகுதியில் இதுவரை எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை. காரணம் அவ்வளவு ஆபத்தான இடம் அது. எந்த நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பது போன்ற அமைப்புதான் அந்தப் பகுதி. அந்த ஆபத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் பாடலை எடுத்திருக்கோம். 

கிளிமாஞ்சாரோ பாடலுக்குதான் இப்படின்னா, ‘காதல் அணுக்கள்’ பாடலுக்கான அனுபவம் அதைவிட விநோதமானது. 

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பா, ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம் என திட்டம் போட்டிருந்தேன். அதுவும் போக, யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும் என்பதில் உறுதியா இருந்தேன்.

அப்படி அமைஞ்சதுதான் பிரேசில் நாட்டில் உள்ள லாங்காய் எனும் ஒரு இடம். பெரிய பாலைவனத்தின் நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்?. அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்தில் வேற எங்குமே கிடையாது. 

ன்

இந்த இடத்திற்கு முதலில் கிளிமாஞ்சாரோ பாட்டுக்காகத்தான் போனோம். ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு பிறகுதான் தெரிஞ்சது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலின் ஒரு பகுதியைதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது என்று. அதனால் கிளம்பி வந்துட்டோம். பிறகு ‘காதல் அணுக்கள்‘ பாட்டுக்கு லொக்கேஷன் தேடுனப்ப அங்க எடுத்தா என்னான்னு தோணுச்சு. உடனே அங்கு புறப்பட்டோம்.


 லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஹோட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்பில் பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணீருக்குள் ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். 

ஏன்னா அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுவிட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். 

இது போதாதுன்னு, அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டரில் பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு.‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். 


ரஜினி சாரோட பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தப்ப அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேர்ந்து அவரை இன்னும் அழகா காட்டும்.

 எந்திரன் பாடல்களிலேயே ‘காதல் அணுக்கள்’ பாடல்தான் எனக்கு மிகவும் பிடிச்ச பாடல்” இப்படி இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டது பற்றி ஷங்கர் விளக்கினார்.  

படப்பிடிப்புக்குதான் படாதபாடு பட்டார்கள் என்றால் இசைக்கும்கூட அதிக சிரமப்பட்டுள்ளனர்...

ஏ.ஆர் ரஹ்மானின் கடின உழைப்பு பற்றி யாவரும் அறிந்ததுதான். தூங்காமல் இரவில்தான் மெட்டு போடுவார். அவர் ஒரு‘ராக்கோழி’என்று அவரை அறிந்தவர்கள் கூறுவது வழக்கம். அவரது கடின உழைப்புக்குதான் இரட்டை ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன . 

அப்படிப்பட்ட இசைப்புயல் எந்திரன் பிரமாண்டத்தில் சிறப்பான தனது பங்களிப்பு பற்றி கூறியது...
  
“படத்தோட மையக் கருத்துக்கு பின்னணி இசையும் பொருத்தமா அமையணும் என ஷங்கர் எதிர்பார்த்தார். படத்துல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறதனால், அந்த இடத்துல சவுண்ட் பெருசா இருந்தால்தான் சிறப்பா இருக்கும். 

அதுக்காக, லண்டன் சென்னை மும்பை என மூணு இடத்துல பின்னணி இசை சேர்க்குற பணியை செய்தோம். லண்டனில் மட்டும் 100 இசைக் கலைஞர்களை வச்சு ரெக்கார்ட் பண்ணியிருக்கோம். அங்க டோல் பவுண்டேஷன் என்னும் ஃபேமஸான ஒரு டோல் குரூப் இருக்கு. அவங்க இந்த படத்துக்கு ஒர்க் பண்ணியிருக்காங்க. 


‘சிவாஜி‘ படம் பண்ணும்போது செக்கஸ்லோவியாவில் உள்ள பிராக்கில் ரெக்கார்ட் பண்ணினோம். அங்க சிம்ஃபனி இசைக் கலைஞர்கள் கிடைப்பாங்க. ஆனால், எந்திரனுக்கு, இன்னும் ஒருபடி மேல போய், ‘பிராஸ்’என்னும் இசைக்குழுவை பயன்படுத்தியிருக்கோம். லண்டன்ல இருக்கிற பிராஸ் செக்ஷன், என்னோட ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப் இவங்க எல்லாம் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காங்க. மேலும், நிறைய மாடர்ன் டெக்சர்ஸ் மியூசிக் பண்ணியிருக்கோம். 

இந்த வேலைகள் நடந்த பொழுது ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் தூங்கினோம்.”  இப்படி கஷ்டங்களுக்கு இசைந்துதான் இசையமைத்தோம் என்றார் ரஹ்மான்.

சும்மா வரவில்லை எந்திரன்... இத்தனை சிரமங்களை அடுக்கி வைத்து கட்டப்பட்டதுதான், வியக்கும் எந்திரன் கோட்டை.

இவ்வளவு இன்னல்களையும் இனிதாக்கும் எந்திரனின் வெற்றிச்சாதனை... என்ற ஒரோ சந்தோஷத்துடன் இருக்கிறது எந்திரன் படக்குழு. 
 
நன்றி.. நக்கீரன்

No comments:

Post a Comment