ஷங்கரின் 10 ஆண்டுகால கனவு, 3 ஆண்டுகால உழைப்பு, அத்துடன் உலக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று எல்லாவற்றிக்கும் பலனாக இன்றுமுதல் எந்திரன் திரைவிழா கொண்டாடுகிறது.
எந்திரன் பல ஆச்சரியங்களை நிகழ்த்தி உள்ளது. சில ஆச்சரியங்கள் தானாகவே எந்திரனுக்கு அமைந்துள்ளன. எந்திரன் திரையிடப்பட்டுள்ள இன்றைய தேதியான 01.10.10 என்பதே எந்திரனோடு தொடர்பானதே. 011010 என்னும் குறியீட்டு மொழியில்தான் கணிப்பொறித் தகவல்கள் பதிவாகும். அந்த வகையில் எந்திரனோடு சம்பந்தப்பட்டுள்ளது இந்த ரிலீஸ்தேதி.
எந்திரன் படக்குழுவினர் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி மகுடமாக இன்று வெளியாகியுள்ளது எந்திரன். உலக அளவில் 3000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், கோவை என தமிழகமெங்கும் திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கொண்டாட்டம், தீபாவளிக் கொண்டாட்டமாக எந்திரனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
திரையரங்குகள் எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பாலாபிஷேகம் மழையாகப் பொழிகிறது. தவுசன்வாலா வெடிசத்தம் சும்மா வானையே அதிரவைக்கிறது. இந்த அமர்க்களம் இங்குமட்டுமல்ல... சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா, சீனா, ஜப்பான், துபாய் என உலகமெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடிவருகிறார்கள்.
இப்படி ரசிகர்கள் கொண்டாடிவரும் எந்திரனை விளையாட்டு வீரர்களும் கொண்டாடவிருக்கிறார்கள். காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை திருப்தி படுத்தவிருக்கிறது எந்திரன்.
காமன் வெல்த் விளையாட்டு கிராமத்தில், போட்டிக்காக வந்திருக்கும் வீரர், வீராங்கனைகள் கண்டு மகிழ ஒரு திரையரங்கம் உருவாகப்பட்டுள்ளது. இதில் ரோபோ (எந்திரன் இந்திப் பதிப்பு) , அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல புதுப்படங்களை திரையிடத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படி இத்தனை சிறப்பு மிக்க எந்திரனுக்கே ஹைலைட்டானது கடைசி 40 நிமிட விறுவிறுப்பான காட்சிகள்தான். இந்த சந்தோஷமான நேரத்தில் அந்த அனிமேட்ரானிக்ஸ் காட்சிகள் உருவான விதத்தை ஷங்கர் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா...
இதோ அவரின் எந்திர வார்த்தைகள்...
“எந்திரனின் ஒவ்வொரு காட்சியையும் எந்த படத்தின் சாயலும் வந்திடக் கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு திரைக்கதை அமைத்திருக்கோம். அதனால் படத்தில் எல்லாமே பிரெஷ்ஷா இருக்கும்.
எந்திரனின் அனிமேட்ரானிக்ஸுகாக ‘ஸ்டான்வின்ஸ்டன்’ என்கிற ஹாலிவுட் ஸ்டூடியோவுக்கு போனோம். நாங்க ஏற்கனவே படத்தை ரஃபா ரெடி பண்ணி வச்சிருந்தோம். அதை அங்க திரையிட்டு, இதுதான் கதை, இதுக்கு ரோபோ பண்ணணும் என சொன்னதுமே, அங்க இருந்த எல்லாருமே “வாவ்... எக்ஸலன்ட். ரொம்ப புது ஐடியாவா இருக்கு” என்று எங்கள் கையை பிடிச்சு குலுக்கினாங்க.
ஒரு ரோபோ பண்ண வேண்டும் என்றால் இங்கேயே அனிமேஷனில் பண்ணலாம். ஆனா, அது அனிமேஷன்னு ரசிகனுக்கு தெரிந்து விடும்.
அதனால, அனிமேட்ரானிக்ஸில் ரஜினி மாதிரியே மெட்டலில் ஒரு உருவத்தை உருவாக்கி, அதை இயங்க வச்சோம். இந்த இயக்கத்துக்குதான் அனிமேட்ரானிக்ஸ் தேவைப்பட்டது. ரசிகனின் நம்பகத் தன்மைக்காக, அதிக செலவு பண்ணி அதை பண்ணியிருக்கோம்.
அதுமட்டுமில்லாமல் வேற சில டெக்னிக்குகளையும் இதற்காக பயன்படுத்தியிருக்கோம். ரோபோ ரஜினி பண்ற விஷயங்கள் எல்லாமே அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.
இந்தப் படத்துக்காக ரஜினியின் உழைப்பு அபாரமானது. ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப ஆர்வமாக கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்.
எவ்வளவு நேரமானாலும் ஸ்பாட்டுலயே இருப்பார். அவரோட எளிமையை பத்திதான் எல்லாரும் பேசுவாங்க. ஆனா, அவரோட உழைப்பை எந்திரனில் பார்த்து அசந்திருக்கேன்.
இதில் வரும் ஒரு ரயில் சண்டை காட்சியில் ரஜினி அதிக ரிஸ்க் எடுத்து சண்டை போட்டிருக்கார். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு இந்தச் சண்டைக் காட்சியில் பலமுறை விபத்து ஏற்பட்டது. ஒரு கட்டத்துல அவர் பிழைப்பதே கஷ்டங்கற நிலைமை. ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளை அமைத்தார்.
இதில் வரும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி த்ரில்லிங்கா, இப்படியெல்லாம் பண்ண முடியுமா என்கிற மாதிரியான சண்டைக்காட்சி அது. அதற்காக பட்டபாடு கொஞ்சமல்ல.
உலகத்திலேயே முதன்முறையா வித்தியாசமான அனிமேஷன் பண்ணியிருக்கோம். ‘குங்குஃபூ ஹஸில்’, ‘கிடாரோ’ உட்பட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் பண்ணியிருக்கிற பிராங்கி சங்க்தான் எந்திரனுக்கும் பண்ணியிருக்கார்.
அவராலேயே குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அனிமேஷனை முடிக்க முடியவில்லை. ‘இது எனக்கே சவாலான விஷயமா இருக்கு. இதுக்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுது. பக்காவா பண்ணுவோம், வெயிட் பண்ணுங்க’ என்றார் பிராங்கி. அப்படி கஷ்டப்பட்டு, கவனமாக உருவாக்கிய கிளைமாக்ஸ் நிச்சயம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார் எந்திரனுக்கு உயிரூட்டிய ஷங்கர்.
No comments:
Post a Comment