அக்.18,2010
படத்தைத் தொடங்கியதில் இருந்து இசை வெளியீடு வரை அவ்வப்போது தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து வந்த இயக்குனர் ஷங்கர், எந்திரன் ரியாக்ஷன்களைக் கோர்த்து நன்றி நவில்கிறார்.
"எந்திரன் படத்தை பார்த்து ரசித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விமர்சனம் செய்து பாராட்டிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தெற்கு, வடக்கையும் தாண்டி, உலக அளவில் 'பாக்ஸ்-ஆபிஸ்' சாதனையை நிகழ்த்தியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.
எந்திரனைப் பார்த்த பிறகு, என்னை நேரடியாகவும் போன் மூலமும் தொடர்புகொண்டு இந்தியத் திரையுலகின் முக்கியக் கலைஞர்கள் பாராட்டினர்.
அமீர் கான் படத்தை பார்த்து விட்டு, என்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியதில் நெகிழ்ந்துபோனேன். நான், அமீர்கான், அவருடைய மனைவி கிரண் ராவ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் எந்திரன் படத்தை பற்றி விடிய விடிய பேசினோம்.
எந்திரனை ரசித்துவிட்டு தனது பரவசத்தைப் பகிர்ந்துகொண்டார், ஹிர்த்திக் ரோஷன். பூச்செண்டுடன் அழகான வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி அசத்தினார், நடிகர் கமல்ஹாசன்.
கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர்கள், நடிகர்கள் பலரும் தங்களது பாராட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் பாலச்சந்தரிடம் இருந்து வந்த வாழ்த்துச் செய்தியைக் கண்டு வியந்துவிட்டேன். திரையுலகில் 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் அவரே எனக்கு ரோல் மாடல். அவரைப் போல் 15 ஆண்டுகளேனும் இயக்குனராக நிலைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
அவரது வாழ்த்துக் கடிதத்தைப் படித்தபோது, உணர்வெழுச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டேன். கடித்ததை முழுவதும் படித்து முடித்த அந்தத் தருணத்தில், எனது கண்ணீரை அடக்க முடியவில்லை. எனது தொழிலில் பணிவுடனுடம், கூடுதல் எனர்ஜியுடனும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது," என்று நெகிழ்ந்திருக்கிறார் ஷங்கர்.
எந்திரன் படத்தை 'இந்தியாவின் அவதார்' என இயக்குனர் பாலச்சந்தர் தனது வாழ்த்துக் கடிதத்தில் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி - கா.இசக்கிமுத்து (ஜூனியர் விகடன்)
No comments:
Post a Comment